Friday, May 3, 2013

டீ, லெமன் டீ,கிரீன் டீ,பால் டீ இன்ன பிற


தமிழில் தேநீர் என்று யார் சொல்லுகிறார்கள்? எளிய மக்கள் என்றில்லை,பெரும்பாலான மனிதர்களுக்கும் விருப்ப்பானம் தேநீர். சுடுநீர் ஊற்றி கழுவுவது அதிகம் இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.சிலர் கௌரவமாக பேப்பர் கப்பில் போடச்சொல்லி விடுகிறார்கள்.எளிய மக்கள் தண்ணீர் குடிக்க இக்கடைகளையே நாடுகிறார்கள்.லேசாக தலை வலித்தால்,சோர்ந்து போனால்,நண்பர்கள்,உறவினர்களை வெளியில் பார்த்தால் டீ சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது.உறவை பலப்படுத்துவதில் இன்று தேநீருக்கு பெரும்பங்கு உண்டு.

கிராமத்து தேநீர்க்கடைகள் நட்பை வளர்ப்பதுடன் கூடவே வம்புகளையும் வளர்க்கிறது.சில நேரங்களில் அரசியல் சூடு பறக்கும்.நாளிதழை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருப்பார்கள்.அனைத்து தாள்களையும் யாராவது படிக்க முடிந்தால் அது அவருடைய அதிர்ஷ்டம்.கலப்படமில்லாத டீத்தூள் கொண்ட டீ கிடைத்து விட்டால் இன்னமும் அதிர்ஷ்டம்.ஒவ்வொரு ஊராக மலிவு விலைக்கு விற்பனை செய்வதை கலப்பட பேர்வழிகள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.கலப்படம் செய்தவற்றை விலைக்கு வாங்கும் பலருக்கு அது தரமற்றது தீங்கானது என்பதே தெரியாது.
தேநீரைப்பொருத்தவரை ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது.ஒவ்வொரு பகுதிக்கும் தயாரிக்கும் முறை மாறுபடுகிறது.இஞ்சி டீ,ஏலக்காய் டீ,லெமன் டீ என்று பகுதிவாரியாக தயாரிப்பும் சுவையும் மாறும்.இங்கே பாய்லரை பயன்படுத்தும் கடைகளே அநேகமாக இல்லை.தனியாக டிகாக்‌ஷன் கிடையாது.பாலுடன் சேர்த்து காய்ச்சுகிறார்கள்.கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும்.கிராமங்களில் காலை நேரம் தவிர யாராவது வந்து கேட்டால் மட்டுமே அடுப்பை பற்ற வைப்பார்கள்.

மனிதர்களில் தேநீர் பருகும் முறைகளிலும் தனித்தனி குணம் இருக்கிறது. என் நண்பர் ஒருவருக்கு ஆடை இருந்தால் பிடிக்காது. சிலர் ஆடை மட்டும் கேட்பார்கள்.சமீபத்தில் ஒருவர் நுரை இல்லாமல் டீ கேட்டார்.சிலருக்கு லைட் டீ. அதிலும் பால் மீது சில துளிகள் டிகாக்‌ஷன் விட்டால் போதும்.சுத்தமாக பால் கலக்காமல் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.வேலூர் அருகே ஒருவர் பால் டீ என்றவுடன் உற்று கவனித்தேன்.அது டீ அல்ல! பால் மட்டும்தான். அதை ஏன் பால் டீ என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
                                                                                    டீயில் கலக்கப்படும் சில பொருட்களைப்பார்ப்போம்.இலவம்பஞ்சு காய்,துணிகளுக்குப்போடும் சாயம்,செயற்கை நிறமிகள்,செம்மண் போன்றவை.இவை வட்டாரத்திற்குத் தகுந்தவாறு மாறுபடும்.முழுமையாக தெரியவேண்டுமானால் நாட்டில் உள்ள அத்தனை டீக்கடைகளிலும் பரிசோதனை செய்யவேண்டும்.கிராமத்தில் உள்ள பல கடைகளில் குறைந்த விலையில் டீத்தூள் கிடைக்கிறதென்று வாங்கிவிடுவார்கள்.முன்பே சொன்னதுபோல குடிப்பவர்களின் உடல்நலனுக்கு கெடுதல் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

                                   கலப்பட்த்தால் மிக அதிக மக்களை அதுவும் எளிய மக்களை பாதிக்கும் ஒன்று டீத்தூள்.வயிற்றுப்பிரச்னை,குடல் புண் முதல் புற்றுநோய் வரை கொண்டு செல்லும் தன்மை இதில் உள்ள கலப்பட பொருள்களுக்கு உண்டு.இது பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.கிராமங்கள்தோறும் பரிசோதனை செய்து விளக்கம் அளிக்க பயிற்சி தரலாம்.
                                    தேநீர் அருந்துவதால் நன்மை இருக்கிறதா? இல்லையா? பலர் நான் டீ,காபியே குடிப்பதில்லை என்று பெருமையாக சொல்வதும் உண்டு.சுவாச கோளாறு உள்ளவர்கள் அதிகம் தேநீர் விரும்பிகளாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.சாதாரண தலைவலிக்கு பலருக்கு டீ போதுமானதாக இருக்கிறது.ஃப்ளூரைடு இருப்பதால் பல்,ஈறு தொடர்பான சில நோய்களை தடுப்பதாக சொல்லப்படுகிறது.க்ரீன் டீ,பிளாக் டீ போன்றவற்றை ஆண்டி ஆக்சிடெண்டுகளுக்காக போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
                                     மாலைக்குப்பின் தேநீர்,காபி குடிப்பது தூக்கத்திற்கு நல்லதல்ல.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை இவற்றைத் தவிர்ப்பது இரும்புச்சத்து உடலில் சேர்வதை உறுதிசெய்யும்.குடல்புண் உள்ளவர்கள் டீகாபி அருந்தக்கூடாது.தரமான தேயிலை பயன்படுத்தும் கடைகள்,வீட்டில் தயாரிக்கும் தேநீர் ஒரு நாளைக்கு மூன்று நான்கு கப் வரை குடிப்பதில் பாதிப்பு எதுவும் இருக்காது.
-

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கு ஒரு கடையைத் தவிர மற்றதெல்லாம் கலப்படம் தான்... பயனுள்ள தகவல்களுக்கு நன்றி...

Vaidheeswaran said...

நீங்கள் டீ பற்றி நன்றாக கட்டுரை எழுதியுள்ளார். இதை போல், டீ பற்றிய என் பதிவு பாருங்கள்

http://vaidheeswaran-rightclick.blogspot.in/2010/08/blog-post.html